LatestNews

முள்ளிவாய்க்கால் பேரவலம் இனவழிப்பின் ஓர் அங்கம்: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப் பேரவலம் தமிழனத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவோ அல்ல, நீண்ட தொடரான இனவழிப்பின் ஒரு அங்கம் மாத்திரமே என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

தொடர் இனவழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவம் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்ய, சர்வதேசத்தினால் கண்காணிக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, நினைவிடத்தை அழித்தாலும் நினைவுகளை அழிக்க முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பொங்கும் உணர்வுகளோடு அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபி மிலேச்சத்தனமாக அழிக்கப்பட்டு நினைவுக் கல்லும் வஞ்சகமாக கவர்ந்து செல்லப்பட்டதற்கு அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் மக்கள் தமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *