LatestNewsTOP STORIES

அபாய இடர் வலயமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள யாழின் முக்கிய பிரதேசம்!

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அதனால் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும். திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. அந்தப் பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மார்ச் மாதம் 300 பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 143 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஒரிரு நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து குறைவடையும் என சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது சுயதனிமைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றிவரை 244 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

தற்போது திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அபாய இடர் வலயமாக திருநெல்வேலி பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும் பரமேஸ்வரா கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் பேசி முடிவுக்கு வந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாற்பண்ணை கிராம மக்கள் வெளியில் நடமாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளோம். அத்தியாவசிய சேவை, தொழில் நிமிர்த்தம் வெளியில் வருகை தருவோர் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து வெளியேற முடியும்.

சிறப்புக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து வெளியில் செல்வோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் விண்ணப்பித்து அனுமதி கிடைத்தால் பயணிக்க முடியும்.

யாழ்ப்பாணம் மாநகர், திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டால் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *