FEATUREDLatestNews

இன்றும் மின்வெட்டு – நுரைச்சோலை நாளைமறுதினம் வழமைக்கு வரும்

நுரைச்சோலை மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் வியாழக்கிழமை வழமைக்கு திரும்புமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்நிலையத்தின் மின்னுற்பத்தி ஆரம்பிக்கப்படும்பட்சத்தில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படாதென மின்சார சபை ஊடகப்பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 2400 மெகாவோட் மின்சார தேவை நாட்டில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்களில் 2400 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஊடகப்பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன கூறினார்.

இதேவேளை, இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டை நான்கு வலயங்களாக பிரித்து மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய நேற்று(10) தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இன்றும் மாலை 3.30 முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A ,B, C மற்றும் D எனும் வலயங்களில் பிற்பகல் 3.30 முதல் 5.30 வரையில் ஒன்றரை மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

E, F, G, H, U மற்றும் V வலயங்களில் பிற்பகல் 5 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் R ,S ,T மற்றும் W வலயங்களுக்கான மின்வெட்டு இரவு 8 மணியிலிருந்தி 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மின்வெட்டுக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த வேண்டுகோளுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியது.