வைரம் மற்றும் முத்து பதித்த மோதிரத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண் கூலித்தொழிலாளி!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபென்ன அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அந்த வீதியில் விழுந்த வைரம் மற்றும் முத்து மோதிரத்தை எடுத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
குறித்த வைரம் மற்றும் முத்து மோதிரம் உலக வங்கியின் துணைத் தலைவரின் மனைவிக்கு சொந்தமானது என தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன உதவி பொறியியலாளர் சிதத் பண்டார ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜன. 06) 1,500 வீதிகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக வங்கியின் துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்தனர். வெலிபென்ன பகுதிக்குள் பிரவேசித்த அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு தமது இலக்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வெலிபென்ன உதவி பொறியியலாளர் சிதத் பண்டார ஏக்கநாயக்க,
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபென்ன பகுதியின் ஊழியர் ஒருவர் தரையில் விழுந்து கிடந்த ஒன்றை எடுத்துள்ளார்.
இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தன் அலுவலகத்தில் உள்ள அலுமாரியில் அதனை வைத்துள்ளார்.
உலக வங்கியின் உப தலைவர் மற்றும் அவரது குழுவினர் உரிய பணிகளை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியதும், காணாமல் போன வைரம் மற்றும் முத்து மோதிரம் குறித்து வெலிபென்ன அலுவலகத்தில் விசாரித்துவிட்டு கொழும்பு நோக்கி புறப்பட்டனர். வெலிபென்ன வேலைப் பகுதியில் பணிபுரிபவர்களிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, எங்கள் அலுவலகத்திற்கு வந்த ஊழியர் ஒருவர், தான் எதையோ எடுத்து வந்து தனது அலுவலக அலுமாரியில் வைத்திருந்ததாக கூறினார்.
அதனைச் சோதித்தபோது, அது உலக வங்கியின் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ள நகை என்பது உறுதியானதையடுத்து, அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தோம்.
இது உலக வங்கியின் துணைத் தலைவரின் மனைவிக்கு சொந்தமான மோதிரத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரதிநிதி ஒருவர் நேற்று எங்கள் அலுவலகத்திற்கு வந்து அதை ஏற்றுக்கொண்டார், ”என்று கூறினார்