FEATUREDLatestNewsTOP STORIES

37 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பம்!!

தலைமன்னாரில் உள்ள துறைமுகங்களை புனரமைத்து இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த துறைமுகம் இப்போது மக்கள் பயன்பாட்டிற்காக புனரமைக்கப்படவுள்ளது.

யுத்த சூழல்களின் போது அழிவடைந்த இந்த பிரதேசத்தை மக்கள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டு இருந்ததாகவும் இப்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைவாக துறைமுகத்தினை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கையின் துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துறைமுகத்தில் புனரமைப்பிற்கு சுமார் 1800 மில்லியன் ருபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் துறைமுகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அதன் எல்லையைச் சூழ சுமார் 10 ஏக்கர் நிலபரப்பை அரசுக்கு சொந்தமாக கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தலைமன்னாருக்கும் தனுசுகோடிக்கும் இடையில் பயணிகள் படகு சேவை இருந்ததாகவும் சூறாவளியின் காரணமாக தனுஸ்கோடி துறைமுகம் முற்றாக அழிவடைந்ததனால் இந்த பயணிகள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால்,

இராமேஸ்வரம் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது.

தற்போது மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் தலைமன்னார் துறைமுகத்தினை புனரமைக்க அரசு தீர்மானித்துள்ளது.

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை யாத்ரீகர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கும் குறைந்த கட்டணத்தில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும்,

இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையிலான சரக்கு பரிமாற்றத்தை எளிதாக்குவதுடன்

வடக்கு மக்களின் உற்பத்திகளை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *