“ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவுகிறது” – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பதிலடி!!
ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவியதாகவும், சில ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டுவரும் பொது கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான் கொடவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வசந்தா ஹந்தபஹான் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல், அடிப்படையற்ற கருத்துக்களை ஊடகளுக்கு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு சார்பான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுக்கு சேறு பூசுகின்ற முயற்சிகளை முறியடித்து மொழி, கட்சி அரசியலுக்கு அப்பால் ஆசிரியர் அதிபர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறுமாறும் வலியுறுத்தி, எட்டு தொழிற்சங்கள் ஒன்றிணைந்து இந்த மாதம் முதலாம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
. ”வலப்பனை மஹவூவா பாடசாலையில் ஒரு ஆசிரியர் கொவிட் காரணமாக உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் நுவரெலியா ஆர்பாட்டத்துக்கு ஒரு வாரம் முன்பே நுவரெலியா வைத்திசாலையில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் மக்களுக்கு தெரியும். அதனைவிட நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றில் உயிரிழந்ததோடு, அவர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.” என அவர் கூறியுள்ளார்.
”ஓய்வுபெற்ற நிலையில் ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களை அவர்களுடன் இணைந்து போராட வேண்டிய தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுப்பதனை ஆசிரியர், அதிபர்கள் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இல்லை, ”கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து பொறிமுறைகளையும் நேர்த்தியான முறையில் பின்பற்றியே ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில அதிபர் ஆசிரியர்களை தூண்டிவிட்டு உரிமையை போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
”ஆசிரியர் அதிபர் சம்பள போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் மறுக்கப்பட்ட கல்வியை வழங்குவதற்கும் தொழிற்சங்க கோரிக்கைகளை செயற்படுத்த கல்வி அமைச்சு உட்பட அனைத்து அதிகாரவர்க்கமும் முன்வரவேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.