யாழில் 11 மன்னாரில் 03 உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 11 பேரும் மன்னாரில் மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
இவர்களில் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3 வீடுகளில் வர்ணப்பூச்சு வேலைக்காக பளையிலிருந்து ஒருவர் வந்து சென்றுள்ளார். அவர் மூலமே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலையில் உள்ள சாரதி பயிற்சிப் பாடசாலையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
மன்னாரில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.