வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிகர லாபம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருசக்கர வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 2020-2021-ம் நிதி ஆண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கை நேற்று நடந்த இயக்குனர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2020-2021-ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.9,279 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் நிகர லாபமாக ரூ.1,556 கோடி கிடைத்துள்ளது. இது 2019-2020-ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 23 சதவீதம் அதிகம் ஆகும். முதன்முறையாக 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இந்த காலாண்டில் தான் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இந்த காலாண்டில் உள்நாட்டில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 469 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவீதம் அதிகம் ஆகும். 34 ஆயிரத்து 230 வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 65 சதவீதம் குறைவு ஆகும்.
இந்த காலாண்டில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 398 இருசக்கர வாகனங்களும், 78 ஆயிரத்து 713 வர்த்தக வாகனங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டை காட்டிலும் 22 சதவீதம் அதிகம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் பஜாஜ் பல்சர் மாடல் அதிகபட்சமாக 4 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. பல்வேறு சர்வதேச சந்தைகளில் அதிகபட்சமாக 3 லட்சத்து 80 ஆயிரம் பஜாஜ் பாக்சர் மாடல் வாகனம் விற்பனை ஆகி உள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *