யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட “கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறி” மீள ஆரம்பிப்பது தொடர்பில் சாதகமான நிலை!!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக, சாதமான தீர்வு எட்டப்பட்டதுடன், வடக்கு கிழக்கு கல்விச் சமுகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள், ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன (Dinesh Gunawardena) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம்(28) கல்வி அமைச்சில் இடமபெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டுகளில் கற்பிக்கப்பட்டு வந்த கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கைநெறியை இடைநிறுத்துவதற்கு நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காராணமாக தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மாணவர்கள், குறித்த கற்கை நெறியினை இடை நிறுத்துவதற்கு சொல்லப்படுகின்ற காரணங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல எனவும் தெரிவத்தனர்.

மேலும், யாழ். பல்கைக் கழகத்தில் சட்டப் பீடம் உருவாக்கப்பட்டபோது எதிர்கொண்ட இடையூறுகள் மற்றும் இந்து பீடம் உருவாக்கம் மற்றும் விபுலானந்தர் இசை நடனக் கல்லூரியை கிழக்கு பல்கலைக் கழகத்துடன் இணைத்தமை, அறிவியல் நகரில் வளாகம் உருவாக்கம், 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் மூலம் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொடுத்தமை போன்ற பல்கலைக் கழகங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களில் பின்பலமாகவும் நேரடியாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பங்களிப்பினை சுட்டிக்காட்டிய மாணவர்கள், தங்களுடைய எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், கல்வி அமைச்சருடனான சந்திப்பின்போது மாணவர்களின் எதிர்பார்ப்புக்களில் காணப்படுகின்ற நியாயத்தினை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக குறித்த சிறப்புக் கற்கைநெறி தொடர்வதற்கு நியாயமான இடையூறுகள் இருக்குமாயின் அவை தொடர்பாக உயர் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.

இதன்போது,

ஆரம்பிக்கப்பட்ட கற்கைநெறிகள் இடைநிறுத்தப்படுவது நியாயமற்றது என்பதை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த கற்கை நெறியை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சின் செயலாளரைக் கேட்டுக் கொண்டார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் முகாமைத்துவப் பீடத்தினையும், யாழ் பல்கலைக் கழகத்தில் கடற்றொழில் மற்றும் கடல்சார் விஞ்ஞான பீடத்தினை முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற இடங்களில் உருவாக்குவதற்கான பரிந்துரைகளையும் கடற்றொழில் அமைச்சர் கல்வி அமைச்சரிடம் முன்வைத்தார்.

குறித்த பரிந்துரைகள் கேந்திர ரீதியாகவும் பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியாகவும் சிறப்பானவை என்று தெரிவித்த கல்வி அமைச்சர், இந்தியா, நோர்வே மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் நிதியுதவிகளூடாக குறித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது, கல்வியல் கல்லூரிக்கான மாவட்ட ரீதியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை விரிவாக்கம் செய்வதற்கான விரிவுரையாளர்கள் மற்றும் வளங்களை விருத்தி செய்தல், வடக்கில் பன்மொழித் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்தல், தேசியப் பாடசாலை போன்ற இன்னும் பல விடயங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சருக்கு உறுதியளிததார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *