யாழில் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் அணிதிரளவுள்ள மீனவர்கள்!!

இந்திய மீன்பிடியாளர்கள் மீது நாம் பகைமை காட்டவில்லை. ஆனால் நாளந்தம் அவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளள முடியாதென தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள், இந்திய மீன்பிடியாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில். தாம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக அமையத்தில் இன்றையதினம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை குறித்த சமாசங்களின் பிரதிநிதிகள் நடத்தியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் அவர்கள் கூறுகையில்,

இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறிய, எல்லை தாண்டிய, சட்டவிரோத ரோலர் இழுவைமீன்பிடி முறையால் எமது சொத்துக்கள் நாளாந்தம் அபகரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன. இதை தடுத்து நிறுத்தி எமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்து தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் துறைசார் தரப்பினரூடாக மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தீவகம் மற்றும் தாளையடி பகுதிகளுக்கள் ஊடுருவிய இந்திய மீனவர்கள் எமது கடற்றொழிலாளர்களது பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கிச் சென்றுள்ளனர். இவ்வாறான செயற்பாட்டை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய குறித்த சமாசங்களின் பிரதிநிதிகள் இலங்கை அரசு இந்திய அரசிடம் இது தொடர்பில் பேசி நிரந்தர தீர்வை காணவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

மேலும் இந்திய மீனவர்கள் தமது சட்டவிரோத செயற்பாடுகளை மறைப்பதற்கு மீண்டும் இலங்கை கடற்படையினர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினையை திசைதிருப்பி வருகின்றனர்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் ரோலர்களால் எமது கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் அழிக்கப்டவிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் உடனடியாக அவ்விடத்தக்கு வந்து எமது கடற்றொழிலாளர்களை பாதுகாத்திருந்தனர். இந்நிலையில் எமது சொத்துக்களை பாதுகாத்துதந்த கடற்படையினருக்கு எமது சமாசங்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்திய மீனவர்களால் அத்துமீறி மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளால் நாளாந்தம் எமது கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் எமது தொழிலாளர்களின் அடிச்சுவடியே இல்லாதுபோகும் நிலை உருவாகியுள்ளது.

எனவே எமது கடல் தொழில் நடவடிக்கைகளை பாதுகாத்து எமது தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உறுதிசெய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இந்த சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *