இன்று மீண்டும் 16 ஈழத் தமிழர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 16 ஈழத் தமிழர்கள் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி வயிற்றை கிழித்தும், கழுத்தை அறுத்தும் இலங்கை அகதிகள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 இற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் உள்ளதால், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மைக்காலமாக தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் 18 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 16 பேர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அளவுகதிகமான தூக்க மாத்திரைகளை உண்டும், ஒருவர் வயிற்றை கிழித்தும், இன்னொருவர் கழுத்தை அறுத்தும், இருவர் தூக்கிட்டுக் கொண்டும் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருப்பதான செய்திகளும், காட்சிகளும் பெரும் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள், தாங்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் கூறி வருவதோடு, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்நாட்டு அரசின் சார்பாக அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் சென்னையிலிருந்து இச் சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்திருந்ததோடு, 20 நாட்களில் விடுதலை செய்யவதென வாக்குறுதி அளித்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இவைகள் பலன் அளிக்காததான் காரணமாகவே இவர்கள் கூட்டாக தற்கொலை செய்ய முயற்சித்திருப்பதானது பெரும் கவலையினை உலகத்தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ள விடுதலையினை உறுதிசெய்ய வேண்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *