தீயிட்டு துவம்சம் செய்யப்பட்ட்து.தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷம் – 40 ஆண்டுகள் பூர்த்தி

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளன.

1953 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29 ஆம் திகதி யாழ். நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பொதுமக்களின் பூரண ஆதரவுடன் அந்த அழகிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி அப்போதைய யாழ். முதல்வர் அல்பிரட் துரையப்பாவினால் திறந்து வைக்கப்பட்டது.

கம்பீரமாய் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் சாம்பர் மணத்தை, வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகரமுடியும்.

அறியாமை இருளகற்றும் புத்தொளிக் கீற்றை இன்று போன்றதோர் நாளின் நள்ளிரவு வேளை, காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.

கவர்ந்து செல்லவோ சூறையாடவோ முடியாத தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷத்தை தீது நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று.

1933 ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை சில காலத்தில் பெருவிருட்சமாய் அறியாமை இருள் களையும் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.

 புராதனம் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்…

1800-களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மைவாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ். நூலகம்.

இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தை பற்றின.

1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.

நூலகம் எரியூட்டப்பட்டவேளை இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57 ஆயிரம் நூல்களும், சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29, 500 நூல்களும் இருந்தன.

இவை அனைத்தும் தீயினால் சிதைக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டன என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்ற மாத்திரத்திலேயே பரிசுத்த பெட்ரிக்ஸ் கல்லூரி ஆசிரியர் தாவீது அடிகளார் தன்னுயிர் நீத்தார்.

பற்றிய எப்பொருளுக்கும் தன் வடிவம் கொடுக்கும் தீ அறிவுப் பசிக்கு விருந்தாகும் புத்தகங்களை உண்டு தன்பசி தணித்தது.

சுமார் ஒரு இலட்சம் புத்தகங்கள் நிறம்மாறி, மணம் மாறி உருச்சிதைந்து சாம்பரானதை அத்தனை இலகுவில் கடந்துவிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *