பூசகர்களிடையே யார் முன்னிற்பது என முரண்பாடு – தடைப்பட்ட ஆலய மகோற்சவம்….. நீதிமன்று சென்று முடிவெடுத்த நிர்வாகம்!!
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை ஏற்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில்
இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென கமல்ராஜ் குருக்கள் மற்றும் சிவதர்சக்குருக்கள் ஆகிய இரண்டு பூசகர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு முற்றிய நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆறாம் திகதி(06/06/2023) யாழ்ப்பாணம் நீதிமன்றினால் சிவதர்சக் குருக்கள் என்பவர் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை முன்னின்று நடாத்துமாறும் ஏனைய இரு பூசகர் குடும்பத்தினரும் திருவிழாவை குழப்பக்கூடாது என கட்டளை வழங்கப்பட்டது.
எனினும்,
கமல்ராஐ் குருக்கள் ஆலயத்தினை பூட்டிவிட்டு அதன் சாவியினை எடுத்துச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் நீ்திமன்றக் கட்டளையின் பிரகாரம் அவரிடமிருந்து திறப்பினை பெற்று உரிய பூசகரான சிவதர்சக் குருக்களிடம் அதனை வழங்க முயன்றபோது கமல்ராஜ் குருக்கள் திறப்போடு கொழும்பு சென்றுவிட்டதாக காவல்துறையிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகோற்சவம் ஆரம்பமாவதற்கு முதல் நாளான 09 ஆம் திகதி(09/06/2023) 9.30 மணிவரை குறித்த பூசகர் ஆலயத் சாவியினை கையளிக்காததால் நிலமை மோசமடைந்தது.
ஆலயத்தில் முரண்பாடான நிலைமை காணப்பட்டது.
அங்கு நின்ற பூசகர் ஆலயத்திலிருந்த பெண் ஒருவரோடு முரண்பட்டதோடு அப் பெண்ணையும் 15 வயது சிறுமி ஒருவரையும் தாக்கியுள்ளார்.
பின்னர் முரண்பாடு அதிகரித்த நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் விரைந்து முரண்பாட்டினை தடுத்தனர்.
இந்நிலையில்,
பாதிக்கப்பட்ட குறித்த பெண் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் 9.45 மணியளவில் கமல்ராஜ் குருக்கள் ஆலயத்தில் பிரசன்னமாகியபோதும் ஆலயத் திறப்பினை உரிய பூசகரிடம் வழங்கவில்லை.
வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் காவல்துறையினர் ஆலயத்தினை பூட்டிவிட்டு 10 ஆம் திகதி(10/06/2023) நீதிமன்றில் ஒப்படைப்பதாகவும் அங்கு உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளுமாறும் ஆலயத் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆலயத்திற்குள் சென்று வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
மேலும்,
ஆலயச் சூழலில் நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
09 ஆம் திகதி(09/06/2023) ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் இவ் அசம்பாவிதம் இடம்பெற்றமை பக்தர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.
யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் அண்மைக்காலங்களாக உள்ளக முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன. அண்மைய நிகழ்வு ஒன்றில் ஆலயங்களில் நிலவும் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் இதனை வெளிப்படையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக 09/06/2023 அன்று காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீன்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் மாவட்ட நீதிபதியினால் உத்தரவிடப்பட்டது.
இதனடிப்படையில்,
இன்று(10/06/2023) மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.