யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது கவனயீர்ப்பு போராட்டம்!!
அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு தழுவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் 7 அம்ச கோரிக்கையினை முன்வைத்து நடத்திவரும் தொழிற்சங்க போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் நாடுதழுவிய ரீதியில் 40ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அரசிடம் ஏற்கனவே வைத்த 7 அம்ச கோரிக்கையை விரைவுபடுத்தி தருமாறு கோரிக்கை முன்வைத்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். யாழ்ப்பாண மாவட்டத்திலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் போராட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது. எமது கோரிக்கைகளை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கவனத்தில் எடுத்து, எமது கோரிக்கைகளுக்கான தீர்வு தராத பட்சத்தில் எமது போராட்டமானது மேலும் வலுப்பெற்று, தாய் சங்கத்தின் அனுமதியுடன் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து முற்று முழுதான போராட்டத்திற்கு விரைவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்.
எனவே இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்குரிய தீர்வினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.