அச்சம் கொள்ளாதீர் பக்கபலமாக நாம் இருப்போம் -யாழில் அதிபர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்!!

ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு அழைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் எனினும் ஆசிரியர்கள் எவரும் பாடசாலைகளுக்கு செல்லத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என்றும் அதனால் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பக்க பலமாக தாம் இருப்போம் என்றும் அச் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ் ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்பொழுது கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்தை வைத்துக் கொண்டு ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு வரவழைக்கும் முயற்சியில் கல்வி திணைக்களம் மற்றும் அதிபர்கள் சிலரும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

உண்மையில் இந்த விடயத்தில் தேவையில்லாமல் எந்த விதமான அச்சமும் ஆசிரியர்கள் கொள்ளத் தேவையில்லை. இதனை அனைத்து அதிபர் ஆசிரியர்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். ஏனெனில் முதலாவதாக அதிபர் ஆசிரியர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அடுத்து அண்மையில் வெளிவந்த சுற்று நிருபத்திலும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை. ஆகையினால் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமென்றோ அல்லது கையெழுத்திட வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லே. எனவே தேவையில்லாமல் இந்த விடயத்தில் அதிபர் ஆசிரியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும் அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டிருப்பதால் பாடசாலைகளுக்கு செல்லாமலே இருக்கலாம். அதற்கு லீவு கூட கொடுக்கத் தேவையில்லை.

குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 16 சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் உங்களுடைய தொழிற் பாதுகாப்பு தொடர்பில் எமது சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன. தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அதிபர் ஆசிரியர்களின் தொழிற் பாதுகாப்பிற்கு நாம் என்றும் பக்க பலமாக இருப்போம். ஆகையினால் அதிபர் ஆசிரியர்கள் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாடு முழுவதும் அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகையில் ஒரு சிலர் பாடசாலைகளுக்குச் சென்று போராட்டத்தை திசை திருப்புகின்ற வேலையைச் செய்யாதீர்கள். அது மட்டும் இல்லாமல் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமென்று அறிவித்தல் இல்லாமலும் மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத நிலையிலும் ஆசிரியர்கள் மட்டும் பாடசாலைகளுக்கும் சென்று இலையான் கலைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

எனவே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொழிற்சங்க போராட்டத்தில் அனைத்து அதிபர் ஆசிரியர்களும் எந்த வித அச்சமுமின்றி தொடர்ந்தும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கோருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *