ஈழத் தமிழர்கள் தொடர்பில் தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!!

நீண்ட காலமாக இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 16-ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதன்போதே தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர்,

நீண்ட காலமாக இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

அதேபோன்று, ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்ய இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் எனவும் என்றார்.

இதேவேளை, சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் எனவும் கூறினார்.

அதேவேளை, கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும் எனவும் அவா் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படும் எனவும் தமிழக ஆளுநர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *