புதிய சாதனைகளை சதுரங்க போட்டியில் படைத்த மாணவர்கள்!!
இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “SriLanka National Novice Division Chess championship-2022” போட்டிகளில் இணைந்த மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான போட்டிகள் கடந்த ஜனவரி 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
இப்போட்டிகள் வயது வரையற்ற திறந்த போட்டிகளாக நடைபெற்றதுடன் ஆண், பெண்கள் பிரிவுப் போட்டிகள் தனித்தனியே 5 சுற்றுப் போட்டிகளாக இடம்பெற்றுள்ளது.
இந்தப் போட்டிகளில் திறந்த பிரிவில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் ஜெயராஜ் துஹின் தரேஷ் (Jeyaraj Thuhin Tareash) அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் 5 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட புதிய போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் செங்கலடி கோல்ட் ஸ்ரார் விளையாட்டுக் கழக வீரர் குணசேகரம் கிருத்திகன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் கெய்ஷா தேஜன் (Keisha Dejan) 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை,
பெண்கள் பிரிவுப் போட்டிகளில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் (BT/St.Cecilia’s Girls college) மாணவி தியோனி பார்த்லொட் (Thiyonne Barthelot) 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பெண்கள் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்தின் மாணவி ரித்திக்கா ஷமி ரஜினிகாந்த் (Rithika Shamy Rajinikanth) 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான சதேஷ்னா சந்திரகுமார் (Sadheshnaah Chandrakumar) 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களில் திறந்த பிரிவில் 14 வீரர்களும் பெண்கள் பிரிவில் 11 வீராங்கனைகளும் தேசிய சதுரங்கப் போட்டியில் (National Chess championship 2022) போட்டிகளின் அடுத்த கட்டமான மேஜர் டிவிசன் (Major division) போட்டிகளில் பங்குபற்றும் தகமையை பெற்றுள்னர்.