இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு!!
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளாலேயே தற்காலிகமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், பொய்யான தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரேனும் ஒருவர் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொய்யான தகவலை பரப்புவாராயின் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் நிற்பார்கள். இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகும்.
இவ்வாறு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீரும் பட்சத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று தானாகவே ஏற்படும். இது பொய்யான தகவல் பரவியதன் விளைவால் ஏற்பட்ட பிரதிபலனே அது. எனினும் இது தற்காலிகமானது.
எரிபொருள் தட்டுப்பாடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அல்ல மாறாக எரிபொருள் களஞ்சிசாலையிலேயே ஏற்பட வேண்டும். எரிபொருள் ஏற்றச் செல்லும் பௌசர்கள் திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அந்த சந்தர்பத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்பது உண்மையே. எனினும் அவ்வாறான ஒரு சம்பவம் இதுவரை இடம்பெறவில்லை.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதே உண்மை. எனினும் பொய்யான தகவல்கள் பரவும்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.