சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் !!

அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானிக்கு அமைய நிதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அமைச்சுகளில் நிதி அமைச்சு மாத்திரம் தனியான அமைச்சாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் என்ற புதிய அமைச்சும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கை வகுப்புத் திணைக்களம், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட 10 நிறுவனங்கள் இந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட செலன்திவ இன்வெஸ்மன்ட் லிமிடட் புதிய வர்த்தமானிக்கு அமைய நகர அபிவிருத்தி, கழிவுப்பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கவுள்ளது.

கரையோரப் பாதுகாப்பு, தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு என்ற அமைச்சும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் கீழிருந்த சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் அதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிதாக விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக சேதனப் பசளை உற்பத்தி, ஊக்குவிப்பு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் , உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய உரச் செயலகம், அரச உர நிறுவனங்கள் உள்ளிட்ட 07 நிறுவனங்கள் புதிய இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *