வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு !!
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களை கடந்திருந்தாலும், விமான நிலைய பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின், தனிமைப்படுத்தல் பிரிவின், விசேட சமுக வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்கள் மேற்கொள்ள வேண்டி கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். “எமது நாட்டின், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மூடியிருந்தாலும், இடைக்கிடை செயற்பட்டன. எனினும் அதன் பின்னர் ஜுன் முதலாம் திகதி விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. உலகளவில் பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ் தொற்றுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனின், 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு அமைய தொற்று ஏற்படவில்லலை என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ஒருவரால் நாட்டிற்கு வருகைதர முடியும். இலங்கையர் எனின் 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுடன் நாட்டிற்கு வர முடியும். அன்டிஜன் பரிசோதனை என்றாலும் பரவாயில்லை. யாருக்கும் எவருக்கும் எந்நேரத்திலும் இந்த தொற்று ஏற்படலாம். அதனைவிட தனிமைப்படுத்தல் எனப்படுவது தொற்று ஏற்படாமல் சுகதேகி என்பதை உறுதிப்படுத்தவே மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே பயணிகள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதனைவிட ஒரு விமானத்தில் 75 பேர் மாத்திரமே இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் தூதரகங்கள், விமான நிறுவனங்கள் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதனைவிட தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது எவ்வாறு? ஹோட்டல்களை பெற்றுக்கொள்வது எவ்வாறு என பலர் கேட்கின்றனர். அரசின் சார்பில் செயற்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல விரும்புபவர்கள், விமான நிலையத்தில் இராணுவத்தினால் செயற்படுத்தப்படும் அலுவலகம் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தாம் ஹோட்டலுக்கு செல்ல விரும்பினால், இலங்கை சுற்றுலாச் சபையின் இணையத்தளம் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும். இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள், 14 நாட்கள் களித்து இலங்கைக்கு வருகைதந்தாலும், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நாடுகள் தமது சுகாதார சேவையின் பலம் பலவீனம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்கின்றன. ஒரு நாட்டைப் பார்த்து மற்றுமொரு நாடு தீர்மானம் மேற்கொள்வதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.