பொது முடக்கத்திற்குள்ளாகிறதா நாடு?? தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!!

நாட்டை முடக்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா மற்றும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம்வரை நீடிக்குமெனவும் சுகாதாரத் துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் தென்னிலங்கையில் இயங்கும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமுடக்கம் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் அதேவேளை, அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இயக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

நாட்டில் டெல்ட்டா வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 150ற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இதனைவிட மறு அறிவித்தல் வரை வைபவங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மேலும், இன்று முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளில் அல்லது மண்டபங்களில் திருமண வைபவங்களை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதத்திற்கு உட்பட்டவர்களே இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *