யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!!

சிறிலங்காவின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1971இல், முன்வைத்த  இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்ற யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்..

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதிஅரச தலைவர் எடுத்துரைத்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியதோடு, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின்,

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த கோட்டாபய, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார். இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *