போலீஸ் மகன்.. ஆக்ரோஷமான அப்பா – ஷாருக்கானின் ‘ஜவான்’ ட்ரெய்லர் எப்படி?
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரிவ்யூ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. அவன் அடுத்தடுத்த போர்ல தோற்றுப் போனானாம்’ என்று ட்ரெய்லரின் தொடக்கத்தில் வரும் வசனங்கள் ஷாருக்கின் முந்தைய தோல்விகளுடம் தொடர்புப் படுத்திப் பார்க்க முடிகிறது. படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், ஆக்ரோஷமான அப்பாவாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார் என்பதை ட்ரெய்லரின் வாயிலாக தெரிந்து கொள்ளமுடிகிறது. அட்லீ படங்களில் வழக்கமாக இடம்பெறும் ‘ரிச்’ ஆன ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இதில் ஒருபடி மேலே இருக்கின்றன என்று சொல்லலாம். ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கின்றன. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துவிட்டால் வரும் செப்.7 ரசிகர்களுக்கு செம ட்ரீட் உறுதி. ‘ஜவான்’ ட்ரெய்லர் இதோ: