பருத்தித்துறையில் பரபரப்பு சம்பவம்- மீனவரின் அதிரடிச் செயற்பாடு!!

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை நாளாந்தமாக இழந்துள்ளனர்.

இந்நிலையில் பருத்தித்துறை முனை பகுதி மீனவர் இந்திய இழுவை மடி படகால் தனது பத்து இலட்சத்திற்கும் மேலான வலைகளை இழந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியுற்ற மீனவர் இருக்கின்ற வலையை வைத்து இனிமேல் கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலையில் தனது எஞ்சிய வலைகளை பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள்,

கடற்றொழில் அமைச்சரிடம் பல தடவைகள் முறையீடு செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை எனவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து முறைப்பாட்டுத் துண்டை தருமாறும் அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,  முறைப்பாட்டுத் துண்டுகள் பல கொடுக்கப்பட்டும் எந்த இழப்பீடும் இல்லை என்றும், கரையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை இந்தியன் இழுவைமடி படகுகள் வருவதாகவும், தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர், மற்றும் கடற்படை அனுமதியளித்தால் எல்லை தாண்டிய இழுவை மடி படகுகளை தாம் கைப்பற்றி உரிய தரப்புக்களிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கும் அவர்கள், வங்கிகளில் பல இலட்சம் கடன் பெற்று வலைகளை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபடும் தாம் நாளாந்தம் இவ்வாறு வலைகளை இழந்து வருவதானால் பொருளாதார ரீதியாக தமது குடும்பம் வீதிக்கு வந்துள்ளதாகவும், நூற்றுக்கு மேற்பட்ட படகுகள் தொழிலிற்கு செல்லாது கரையில் கட்டப்பட்டுள்ளதாகவும் தமது துயரம் எப்போது தீரும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உள்ளூர் இழுவை படகுகளும், மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களும் தற்போது மிகமிக அதிகமாக இடம் பெறுவதாகவும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் மற்றும் உள்ளூர் தோழர்கள், சுருக்குவலை தொழில், கடலட்டை தொழில் என்பனவும் மீன் பெருக்கிடங்களை அழித்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் நேரடியாக அதிகாரிகளுக்கு கட்டளையிட்டும் அவர்கள் கைஊட்டை பெற்று சட்டவிரோதமான தொழில்களை தடுப்பதில்லை என்றும், கடற்படை தமது ஆவணங்களை மட்டும் பரிசோதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டும் தமிழ் நாடு முதலமைச்சர் எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகள் வருவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்திய இலங்கை தமிழ் மீனவர்களை மோதவிடும் பிரச்சினைகளை தாங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *