முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு தீ வைப்பு!
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஜிவத்தை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக முசலி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
முசலி பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை மேய்ச்சலிற்காக விட இடம் இல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில், கஜிவத்தை பகுதியில் உள்ள பல ஏக்கர் அடர்ந்த காடுகள் அரசின் ஒத்துழைப்போடு அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு தீ வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்கள் தமது கையடக்க தொலைபேசியில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேச சபையின் தவிசாளரை தொடர்பு கொண்டு வினவிய போது,
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கஜிவத்தை பகுதியில் அண்மைக்காலமாக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.
யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம் பெற்று வருகின்றது என்பது தெரியவில்லை. அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகளை அழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.