மத்தளவிற்கு அபுதாபியிலிருந்து நேரடி விமானசேவை!!

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியிலிருந்து ஜூன் 1 ஆம் திகதி முதல் திட்டமிடப்பட்ட நேரடி விமானசேவை இடம்பெறவுளளதாக சிவில் விமான போக்குவரத்து, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் அமைந்துள்ள சில்க் ரூட் விசேட விருந்தினர் அறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்தள விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலிகமாக மாத்திரமே விமானங்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் ஆனால் விமான நிலைய வரலாற்றில் முதல் தடவையாக இந்த விமான சேவைகள் அபுதாபியில் இருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த விமான நிறுவனம் ஒரு மிகக் குறைந்த கட்டண விமான சேவையாகும், இது இலங்கையிலிருந்து அபுதாபிக்கு (ஒரு விமானத்திற்கு) ரூ.11,000 அல்லது US $ 48 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அபுதாபியில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள், திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் விமான சேவை நேரடி விமானங்களை இயக்குகிறது.

ஜூன் 01 முதல் தொடங்கும் விமானங்களுக்கான டிக்கெட்டுகளை 03/09 முதல் விமான நிறுவனம் விற்பனை செய்யத் தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

குறைந்த கட்டண விமான சேவையானது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து குறிப்பாக இஸ்ரேலில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சானக்க தெரிவித்தார்.

இலங்கையில் மத்திய கிழக்கு சேவைகளுக்காக புறப்படும் தொழிலாளர்களில் 90% பேர் மத்தள விமான நிலைய பகுதியில் வசிப்பவர்கள் என்றும் அதில் மொனராகலை மற்றும் அம்பாறை முக்கிய இடங்கள் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு செல்பவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் இதற்காக விசேட இடமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *