கிளிநொச்சி சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்குள் தெரிவான 03 வீராங்கனைகள்!!

வாய்ப்புகள் கிடைத்தால் திறமையை நிரூபிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பலரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்..

கிளிநொச்சியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்கு 03 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.

பாஸ்கரநாதன் டனுஷா, விஜயகுமார் நிதுஷா, இதயரஞ்சன் தேனுஜா ஆகியோரே அந்த மூன்று வீராங்கனைகளாவர்.

இந்த மூவருமே சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பயின்றவர்கள் என்பதுடன் தற்போது உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக அணிக்காக விளையாடும் வீராங்கனைகளாவர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்த பாஸ்கரநாதன் டனுஷா 2013 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் கபடி விளையாட்டில் பிரகாசித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல்தடவையாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடசாலை மட்ட தேசிய விளையாட்டு விழாவில் கபடி போட்டியில் 20 வயது பிரிவில் சாம்பியனான போது விஜயகுமார் நிதுஷா கபடி அணிக்கு தலைவியாக இருந்து சாதித்ததுடன் சிறந்த பிடி வீராங்கனையாகவும் தெரிவானார்.

2018 ஆம் ஆண்டு 17 வயது பிரிவில் சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தேசிய விளையாட்டு விழாவில் கபடி போட்டியில் சாம்பியனாவதற்கு இதயரஞ்சன் தேனுஜா முக்கிய பங்களிப்பு வழங்கியவராவார்.

வசதிகளே இல்லாது தேசிய கபடி குழாத்துக்கு தெரிவாகியுள்ள இந்த வீராங்கனைகளுக்கு உரிய ஊக்குவிப்பு மாத்திரமே அவசியமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *