காபூல் நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு? பொதுமக்கள் பீதி
விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.
காபூல்:
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வெளியேறுவோர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காபூல் நகரில் இன்று மீண்டும் குண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது. ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரு வீடு இடிந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பரவியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.