யாழ்.பல்கலை வவுனியா வளாக தரமுயர்த்தல் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு பெற்றுள்ளமையானது எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே  காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

வவுனியா யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமென அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர் எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் திகதியுடன் நீக்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக்கழகமென தரமுயர்த்தப்படுவதானது எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த அளப்பரிய வெற்றியாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை நாம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு  ஜனாதிபதி,  பிரதமர் மற்றும் உயர் கல்வியமைச்சர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் டாக்டர். மங்களேஸ்வரன் ஆகியோருடன் இது தொடர்பாக தொடரான முயற்சிகள் செய்து வந்தோம்.

இது இன்று எமக்கு வெற்றியளித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

 

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் தூரநோக்கோடு செயற்பட்ட போது எனது தொடர் முயற்சிக்கு பக்கபலமாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு மிக முக்கியமாக எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், உறுதுணையாக இருந்த உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் டாக்டர். மங்களேஸ்வரன் உட்பட வளாகத்தின் அனைத்து தரப்பினருக்கும் விஷேடமாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் வவுனியா பல்கலைக்கழகமானது தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறிகளில் விஷேடத்துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமான ஒரு அடிப்படையை கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் தூரநோக்குடன் பரந்தளவிலான தொடர்புபட்ட கற்கைகளுடன் சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை இந்த பல்கலைக்கழகம் தமது தூரநோக்காக கொண்டு செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *