அறுவடை செய்த மரக்கறிகளை கொள்வனவு செய்ய வியாபாரிகள் வரவில்லை – காரணம் எரிபொருள் இல்லை….. விவசாயிகள் அங்கலாய்ப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனைய நாட்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் கிலோ வரையான மரக்கறிகள் கிடைக்கும்.

ஆனால்,

இன்றைய நாட்களில் 1.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கூட கிடைப்பதில்லை என அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து அதிகளவிலான மரக்கறிகள் கிடைத்த போதிலும் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு லொறி மரக்கறிகளே வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும்,

பொருளாதார மையத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமன்றி வணிகர்களும் தற்போது தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் இதர செலவுகளை செலுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்ற வருடங்களில் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகளவான மரக்கறிகளை பெறுவதாகவும்,

ஆனால்,

இந்த நாட்களில் பொருளாதார நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் எரிபொருள் இல்லாததால் அறுவடை செய்த மரக்கறிகளை கொள்வனவு செய்ய வியாபாரிகள் வராத காரணத்தால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் மரக்கறி பயிர்களைக் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும்,

மரக்கறி உற்பத்திக்குத் தேவையான உரம் மற்றும் நீரை இடுவதற்கு தேவையான மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றின் பற்றாக்குறை நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மரக்கறி விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்,

ஒரு விலைக்கு மரக்கறிகள் விற்பனை செய்யப்படாமை மற்றொரு காரணியாக உள்ளதாக விவசாயிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *