யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய மருத்துவர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.

எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது எனவும் இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 31ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 7ம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து வந்து, 208 பேருடன் தங்கியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் மாலையே 7ம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டார். மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட பீ.சி.ஆா் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் குழு கூடி ஆழமாக இந்த விடயத்தை ஆராய்ந்துள்ளதுடன், குறித்த நபர் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும்

நேரடியாக தொடர்புகளை பேணினாரா? என்பதை ஆராய்ந்துள்ளோம். இதற்கமைய குறித்த நபர் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய 4 உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தா்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான பரிசோதனைகள் எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் பாதுகாப்பு அங்கிகள், முக கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபர் பரிசோதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் கையுறை, முக கவசம் அணிந்துள்ளதுடன், சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனர்.

ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவர்களுக்கோ, ஊழியர்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேகம் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap