இந்தியா – யாழ்ப்பாணம் இடையே படகு போக்குவரத்து….. முழுமையான விபரங்கள் வெளியீடு!!

இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

இந்தியாவுடனான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் தமிழர்கள் வாழும் திருகோணமலை – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது, தென்னிந்தியாவுக்கும் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பு வர்த்தகர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட தமிழக வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

தற்போது தமிழக வர்த்தகர்கள் நலன் கருதியும் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்கள் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதனை இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் நிமல சிறிபால டி சில்வா கூறியிருக்கிறார். இந்த சேவையானது ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

 

இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து காரைக்கால் துறைமுகத்தை வந்தடைய சுமார் 3.30 மணிநேரமாகும்.

ஒரே நேரத்தில் 300 பயணிகளை அழைத்துவரக் கூடிய கப்பல்களை இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயணத்துக்கான கட்டணமாக 60 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட உள்ளது.

அத்துடன் ஒரு பயணி சுமார் 100 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை எடுத்துச் செல்லவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்துக்கான குடிவரவு முனையம் உள்ளிட்ட பணிகளை அமைக்கவும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த காலங்களில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டது.

ஆனால் போதுமான வரவேற்பு கிடைக்காத நிலையில் அப்போக்குவரத்து முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *