இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் – நடிகர் சூர்யா

இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்றும் கூறியிருந்தார்.
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதினார்.
அந்த கடிதம் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தனது முடிவை அறிவித்தது. தன்னளவில் சரியாக நடந்து கொள்வதாக கூறும் சூர்யா போன்றவர்கள், நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா, இல்லையா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது.
நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தின்  நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *