இலங்கையில் மேலும் 8 பொருட்களுக்குத் தடை

சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் மேலும் 08 பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றாடல்துறை அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டு, கோப்பைகள், கரண்டிகள் உட்பட மேலும் 08 பொருட்களே தடை செய்யப்படவுள்ளன.

உணவைப் பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள்களை (lunch sheets) தடை செய்யும் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

இது தொடர்பான சுற்றிவளைப்புக்களை அதிகரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலையில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் உரிய முறையில் அகற்றப்படாமை காரணமாக சமூகத்தில் சுற்றாடல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இங்கு சுட்டிக்காட்டினார்.

பயன்படுத்திய முகக் கவசங்களை உரிய முறையில் அகற்றுவது தொடர்பில் ஒழுங்குவிதியொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், இது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்தது.

முகக் கவசங்களை அகற்றும்போது பொது மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *