வீட்டில் பராமரிக்க திட்டம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ,கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இத்திட்டமானது தற்போது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தொடர்பு கொண்டு அவர் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவதற்கு தகுதியானவரா என்பதனை முதலில் பரிசோதிப்பார். அப்போது கீழ்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

நோயாளி இரண்டு தொடக்கம் 65 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். கொவிட் தொற்று நோய் அறிகுறி எதுவும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

கர்ப்பிணித் தாய்மார்களாயின் அவர்கள் 24 வாரங்களிற்குட்பட்ட கர்ப்பவதிகளாக இருத்தல் வேண்டும். வேறு நோய் நிலைமை உள்ளவர்களிற்கு அந்த நோய் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். நோயாளியின் வீடானது அவரினை ஏனையவர்களிடமிருந்து நோய் பரவாது தனிமைப்படுத்தி வைத்திருக்ககூடிய வசதிகளை கொண்டிருத்தல் வேண்டும். நாளாந்தம் தொலைபேசி மூலம் அவரது நோய் நிலைமையினை கண்காணிப்பதற்குரிய தொலைபேசி வசதிகள் நோயாளியின் வீட்டில் இருத்தல் வேண்டும்.

சுகாதார வைத்திய அதிகாரியினால் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டால், அவரது விபரங்கள் மத்திய சுகாதார அமைச்சினால் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கணனி மென்பொருளில் தரவேற்றம் செய்யப்படும்.

அதன் பின்னர் மத்திய சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அழைப்பு நிலையத்தில் இருந்து வைத்தியர்கள் தினமும் நோயாளியினை தொடர்பு கொண்டு நோயாளியின் உடல் நிலைமையினை கண்காணிப்பர்.

தேவை ஏற்படின் நோயாளியும் அவ் வைத்தியரினை தொடர்பு கொள்ளமுடியும்.

நோயாளியின் உடல் நிலைமை மோசமடையும் சந்தர்ப்பத்தில் நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியிருப்பின் அத்தகவல் உடனடியாக பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரிக்கு வழங்கப்படுவதைத் தொடர்ந்து அவர் அந் நோயாளியினை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளினை செய்வார்.பிசிஆர் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் இவ்வாறு 10 நாட்கள் வீட்டுப்பராமரிப்பில் வைத்திருக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *