குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி
தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வில், கடந்த 2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.
தலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற கேள்விக்கு, இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது. இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. இப்படம் திரு மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது ஆகிய மூன்று பதில்களும் இடம்பெற்றிருந்தது.