சுகாதார அவசரநிலையை அமுல்படுத்த கோரி GMOA சுகாதார அமைச்சின் செயலாளருக்கு விசேட கடிதம்!!
இலங்கையில் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார செயலாளருக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மருந்து முகாமைத்துவம் தொடர்பான வழிகாட்டுதல்களைத் தொகுக்க சுகாதார அமைச்சின் கீழ் தொழில்நுட்பக் குழுவொன்றை அமைப்பது முக்கியமானது என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைத்த பின்னர் மருந்து மற்றும் உபகரணங்கள் கிடைப்பதை மறுபரிசீலனை செய்வது முக்கியம் என சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பட்ட சங்கத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உதவியை நாடுவதற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
வெளிநாட்டு உதவி மூலம் பெறப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.