எரிபொருள் விலையேற்றம்: பேக்கரி உற்பத்திகளின் விலை, பஸ் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் கட்டணங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் குண்டூசியிலிருந்து அத்தனை பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அதனை ஒப்பிட்டு ஏனைய செலவுகள் குறித்து ஆராய்ந்து சட்டரீதியாக போக்குவரத்து சபைக்கு இவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளதென அறிவியுங்கள்”

என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, நட்டத்திலிருந்து மீள வேண்டுமானால் பஸ் கட்டணத்தில் 15 வீத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வதானால் 15 வீத அதிகரிப்பினால் திருப்தி அடைய முடியாது எனவும் கட்டாயமாக 25 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் வலியுறுத்தினார்.

நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் புதிய விலை 157 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் புதிய விலை 184 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் டீசல் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று நள்ளிரவு முதல் அதன் புதிய விலை 111 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 144 ரூபாவாகும்.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் புதிய விலை 77 ரூபா என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சினால் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஏற்ப IOC நிறுவனமும் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது.

விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவிற்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களைக் காண முடிந்தது.

2019 இறுதிப் பகுதியில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 60 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலையடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டது.

அதற்கமைய, 2020 மே மாதமளவில் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் சுமார் 26 டொலராக காணப்பட்டது.

இருப்பினும், உலக சந்தையின் மசகு எண்ணெய் விலைக்கு அமைய இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதால், அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை மக்களுக்கு கொடுக்காமல், அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை நிதியமொன்றுக்கு ஒதுக்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்திலும், மசகு எண்ணெயின் விலையை நிலையாக பேணுவதற்கும் இந்த நிதியத்தை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த நிதியம் இலங்கை மின்சார சபையின் நட்டஈட்டை குறைப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *