நான்கு இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்டது தடை!!
கொழும்பின் கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்றைய தினம் காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கல்கிஸை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி இணையத்தினூடாக விற்பனை செய்தமை தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு காரியாலயத்தால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் மேலதிக விசாரணைகளில் , இந்த சிறுமி இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 4 இணையத்தளங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. .
அவை தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு காரியாலயத்தால் கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இணையதளங்களை தடை செய்ய தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த இணையத்தளங்களை நடத்தி செல்லல், இந்த இணையதளங்களுக்குள் பிரவேசித்தல், இந்த இணையத்தளங்களுக்கு தகவல்களை பதிவேற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குற்றச்செயல்களாகும்.
இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு காரியாலயத்தால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.