தீ விபத்தில் சிக்கிய இளம்பெண் உயிரிழப்பு! யாழில் துயரம்!!
குப்பை கொளுத்த மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் மீது எண்ணெய் தெறித்தமையினால் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நல்லூர் வடக்கைச் சேர்ந்த சுஜீபன் தர்சிகா (வயது 28) என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கல்வித் திணைக்களத்தின் பணியாளரான குறித்த இளம் தாய், கடந்த 20ஆம் திகதி வீட்டில் கூட்டிய குப்பைக்குத் தீ மூட்டியுள்ளார். பெரிய கானில் இருந்த மண்ணெண்ணெயை எரிந்து கொண்டிருந்த குப்பைக்குள் ஊற்ற முயன்றுள்ளார்.
இதன்போது கை தவறி அதிக மண்ணெண்ணெய் விசிறியது. அணிந்திருந்த ஆடையிலும் மண்ணெண்ணெய் தெறித்தமையினால் ஆடையில் தீ பரவியுள்ளது.
இதையடுத்து எழுப்பிய அவலக் குரலையடுத்து வீட்டார் உடனடியாகத் தீயை அணைத்து தீக்காயங்களுக்குள்ளான அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
எனினும் 3 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.