சீப்புகள், கூந்தல் கிளிப்புகள் முதல், பால், பழங்கள் வரை அனைத்தின் இறக்குமதிக்கும் தடை….. நிதியமைச்சரினால் அதி விசேட வர்த்தமானி!!
பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், வாசனைத் திரவங்கள், சவரத்திற்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்கள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயண பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள் மற்றும் ‘போ’க்கள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், கூந்தல், போலி சிகைகள், செரமிக் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள், குக்கர்கள், அடுப்புகள், மேசைகள், சிங் மற்றும் கைகழுவும் பேசின்கள், கரண்டிகள், மணிகள், மின் விசிறிகள், வாயுச் சீராக்கிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், வக்கும் க்ளீனர்கள், கிறைண்டர்கள், சவர சாதனங்கள், மின்சார மேசை விளக்குகள், நீர் சேமிப்பு சூடாக்கிகள், நிலையான தொலைபேசிகள், வானொலி ஒலிபரப்பு சாதனங்கள், கணனி திரைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி வகைகள், கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், இசைக் கருவிகள், வாகன இருக்கைகள், மின் விளக்கு தொகுதிகள், (முச்சக்கர வண்டி உள்ளிட்ட சக்கரங்கள் கொண்ட) விளையாட்டு வாகனங்கள, பொம்மைகள், வீடியோ கேம்கள், சீப்புகள் மற்றும் கூந்தலுக்கான கிளிப்புகள் உள்ளிட்டவை போன்ற பொருட்கள் இதில் அடங்குகின்றன…
அனுமதியின்றி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட மேலும் சில பொருட்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானியை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு (10/03/2022) முதல் அமுலுக்கு வரும் வகையில்,
270 முதல் 370 வரை இலக்கமிடப்பட்டுள்ள குறித்த பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் உரிய அனுமதியின்றி எந்தவொரு நபரினாலும் ஏதேனுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்குள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் கையாள்வதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு இறக்குமதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் பரிந்துரைகளின்படி மூன்று கட்டங்களின் கீழ் இவ்வாறு இறக்குமதி கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
முதல் கட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தில், சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாகும். மூன்றாவது கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி மற்றும் அனுமதிப்பத்திர முறை விதிக்கப்படும்.
இறக்குமதி கட்டுப்பாடு உத்திகள் நாட்டின் பொருளாதார நிலையை உகந்த முறையில் நிர்வகிக்கவும்,
சிறந்த நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புவதாக,
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2017 நவம்பர் 09ஆம் திகதி 2044/40 அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுடன் இணைந்தவாறு மேலும் 100 பொருட்களை (இலக்கம் 270 -370) இறக்குமதி செய்வது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.