மற்றுமோர் சாதனை படைத்தது யாழ். போதனா வைத்தியசாலை!!

வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்தினால் மூளைச்சாவடைந்து உயிரிழந்த இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்கிற இளைஞர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது.

சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கும் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை நிபுணர்கள், உணர்வழியியல் நிபுணர்கள், சிறுநீரக நிபுணர்கள் மூலம் மாற்றப்பட்டது.

கண்டியிலிருந்து சத்திரசிகிச்சை நிபுணரொருவர் அழைத்து வரப்பட்டு உதவிகளும் பெறப்பட்டது.

அதிகரித்த கொவிட் நோயாளர்கள் மத்தியிலும் கடந்த 18ஆம் திகதி சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பலமணி நேரத்தையும் தாண்டி வெற்றிகரமாக நடைபெற்றதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறீபவனந்தராஜா தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே, வட மாகாணத்தில் நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தனிநபர் என்பதை தாண்டி ஒருங்கிணைந்து எல்லோருடைய கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக அமைந்ததென சத்திரசிகிச்சையில் பங்கேற்ற வைத்தியர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இனி வருங்காலங்களில் இதனை மேற்கொள்வதற்கு நாங்கள் ஒருசில கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதுபற்றிய போதிய அறிவு இருந்தும் ஆளணி பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பல சிக்கல்களால் இதனைச் செய்ய முடியாமல் இருந்தது.

இவை காலப்போக்கில் சரிவரும்போது இதனை தொடர்ந்து செய்யமுடியும் என்றனர்.

சிறுநீரகம் இரண்டையும் தானமாக வழங்க முன்வந்த அந்த இளைஞனின் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் வைத்தியசாலையினரால் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *