அதிகாலையில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அனர்த்தம்!!

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(13) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் உள்ள தனது செங்கல் தொழில் செய்யும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் என்பவர் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எழுந்து வெளியில் வந்தபோது திடீரென வந்த காட்டுயானை ஒன்று தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.

இதில் பலத்த காயங்களுக்கும், உபாதைகளுக்கும் உள்ளான நபரை அருகிலிருந்தவர்கள் மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இக்காட்டு யானைகளில் தாக்குதலால் அப்பகுதியில் பல அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், பயிர்கள், வீடுகள், உள்ளிட்டவற்றையும் துவம்சம் செய்து வருகின்றன.

அப்பகுதியில் உள்ள பற்றைக் காடுகளில் தங்கியிருக்கும் காட்டுயானைகளை பிடித்து சரணாலயங்களுக்கு கொண்டு சென்று விடுமாறு அப்பகுதி மக்கள் மிகவும் உருக்கமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *