கொரோனா வளிமண்டலத்தில் பரவுகிறதா? விசேட வைத்திய நிபுணர் விளக்கம்!!

கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக வெளியான செய்தி தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

எந்தவொரு வைரஸும் வெளிச்சூழலில் பெருகுவதற்கு ஒருபோதும் இயலாது. கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும். அதற்கான எந்தவொரு விஞ்ஞான ரீதியிலான கண்டுபிடிப்பும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக வைரஸ் பெருகுவது உயிரணுக்களில் மாத்திரமாகும். அத்துடன் வைரஸ் சாதாரண உஷ்ண நிலையில் அது அழிந்துவிடும். நம் உடலுக்கு வெளியே இருந்தால் அது சுமார் 3 மணி நேரங்களில் இறந்துவிடும். அதனால் வைரஸ் எமது உடலுக்குள் செல்லாமல் அனைவரும் பாதுகாத்துக்கொண்டால் இந்த வைரஸை அழித்துவிடலாம்.

வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கும் நபரின் உமிழ் நீர் துளிகளினூடாக வைரஸ் வேறு நபரது சுவாசப்பை வழியாக உடலுக்குள் செல்வதற்கு முடிகின்றது. அதனால் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பேணிவருவதன் மூலம் வைரஸ் இவ்வாறு உடலுக்குள் செல்வதை தடுத்து நிறுத்தலாம்.

எமது கண்களினூடாகவும் வைரஸ் உடலுக்குள் செல்ல முடிகின்றது. என்றாலும் வைரஸ் ஒருசில மேற்பரப்புகளில் குறிப்பிட்ட காலத்துக்கு தங்கி இருக்க முடியும்.

கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதன் மூலம் வைரஸ் அழிந்துவிடும். அதனால் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக கிராம மட்டங்களில் கொவிட் குழுக்களை நிறுவி விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *