சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா -அதிர்ச்சியில் சுகாதார அதிகாரிகள்!!
ஒரு வருட காலத்துக்கு பின்னர் சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சுகாதார அதிகாரிகள், அங்குள்ள மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் ஊற்றுக்கண் என வர்ணிக்கப்படும் வுகானில் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு நேற்று திங்கள்கிழமை புலம் பெயர் தொழிலாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வுகானின் அனைத்து மக்களுக்கும் கொரோனா இருக்கிறதா என்பதை அறிய முழுமையான நியூக்ளிக் அசிட் சோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே சீனாவில் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 12 க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்களை வீடுகளுக்குள் முடங்குமாறு உத்தரவிட்டுள்ள அரசு , உள்நாட்டு போக்குவரத்தையும் முடக்கி உள்ளது.