பாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா?
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘மும்பைகார்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.
இந்நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார். ‘மும்பைகார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த காமெடி வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.