அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடனடி உத்தரவு! கடும் அதிருப்தியில் சுந்தர் பிச்சை

ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார்.

ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு நாளை 24-ம் திகதி முதல்நடைமுறைக்கு வருகிறது.

இந்த உத்தரவால் அமெரிக்காவுக்குள் வேலைநிமிர்த்தமாக ஹெச்-1பி விசா, எல்1 விசா, ஜே விசா, ஹெச்-2பி, ஹெச்-4பி விசா மூலம் வருபவர்கள் இந்த ஆண்டுவரை தடை செய்யப்படுவார்கள், அதிகமான ஊதியத்தில் ஹெச்-1பி விசாவில் வரும் அத்தியாவசியமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பயிற்சி, ஆசிரியர், கவுன்சிலர், கோடைகால பணித் திட்டம் ஆகியவற்றுக்காக ஜே விசாவில் வருவோருக்கும் இந்த தடை பொருந்தும்.

இந்த புதிய விதிமுறை அமெரிக்காவில் வசிக்காமல் முறையான குடியேற்ற ஆவணங்கள், பயண ஆவணங்கள், விசா இல்லாமல் இருப்போருக்கு பொருந்தும். அதேசமயம், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெளிநாடுகளை் சேர்ந்தவர்கள், அவர்களின் மனைவி, குழந்தைகளை இந்த உத்தரவு பாதிக்காது.

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழரான சுந்தர் பிச்சை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமெரிக்கப் பொருளாதாரம் உலகளவில் மிகச்சிறப்பான நிலையை அடைந்ததற்கும், வெற்றி பெற்றதற்கும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது.

அமெரிக்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு எனக்கு அதிருப்தி அளிக்கிறது.

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எனது ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் பரந்து கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

இதேவேளை, தி லீடர்ஷிப் கொன்பரென்ஸ் மனித உரிமைகள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி வனிதா குப்தா வெளியிட்ட அறிக்கையில் “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யும் உத்தரவு நிறவெறி, மற்றும் பிறநாட்டு மக்களின் மீதான வெறுப்பாகவே பார்க்கிறோம்.

அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவாகவே மக்கள் அதிருப்தி அடைந்து பல்வேறு பேரணிகளை நடத்தி வருகிறார்கள், கொரோனா வைரஸ் பாதிப்பை மோசமாக ட்ரம்ப் நிர்வாகம் கையாண்டது” என்று சாடியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap