பேருந்தில் மோதி ஒன்றரை வயது சிறுமி பரிதாபகரமாக பலி!!
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு மகிழுந்தில் மோதி ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கொஹுவல காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொஹுவளையில் களுபோவில பி. ரூபன் பீரிஸ் மாவத்தையில் வசித்து வந்த சுவைரா மொஹமட் முஸ்தாக் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மகிழுந்தை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்த சிறுமியின் தாயின் சகோதரர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
28 வயதுடைய கோடீஸ்வர தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
அவரது சொகுசு மகிழுந்தும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (16/02/2023) பிற்பகல் சமயச் சடங்குகளை மேற்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் வீட்டுக்கு முன்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் இருந்து மகிழுந்தை எடுத்துச் சென்றுள்ளார்.
சிறுமி காரின் முன்பக்கமாக வந்ததில் வேகத்தடையில் மோதுண்டு தரையில் தள்ளப்பட்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தை நேரில் பார்த்த ஒருவர் சாரதிக்கு இதுபற்றி தெரியப்படுத்தியதையடுத்து,
அவர் மகிழுந்தை மீண்டும் எடுத்துச் சென்றபொழுது , அந்த சிறுமி வேகத்தடைக்கும் மகிழுந்துக்கும் இடையே நசுங்கி பலியானதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசவாசிகள் சிறுமியை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (17/02/2023) காலை உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த விபத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில்,
குறித்த விபத்து தொடர்பாக கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.