800 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: வானில் ஒன்றாக தோன்றும் வியாழன்-சனி கிரகங்கள்

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிகழ்வு வருகிற 21-ந்தேதி வானத்தில் நடக்கப்போகிறது. வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

சூரியனை பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை ஒவ்வொன்றும் சூரியனில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்கின்றன.

அவை தாங்கள் இருக்கும் தூரத்துக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை சூரியனை சுற்றிவருகின்றன. ஒவ்வொரு கிரகமும் இதற்கு பல ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன.

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன். இதற்கு அடுத்த இடத்தில் சனி கிரகம் உள்ளது. இரு கிரகங்களும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களை கொண்டது. இதில் சனி கிரகம் மிகப்பெரிய வளையம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வியாழன் 4 நிலவுடன் சேர்ந்து சுற்றி வருகிறது.

சூரியனில் இருந்து வியாழன் 5-வது வரிசையிலும், சனி கிரகம் 6-வது வரிசையிலும் சுற்றி வருகின்றன. சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 14 கோடியே 72 லட்சம் கிலோ மீட்டர்.

இதேபோல சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை போல 5 மடங்கு தூரத்தில் வியாழன் கிரகமும், 7 மடங்கு தூரத்தில் சனி கிரகமும் இருக்கின்றன. சூரியனை சுற்றியுள்ள ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது.

அப்போது ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் நேர் கோட்டில் வருகின்றன. அவ்வாறு வரும்போது நாம் புவியில் இருந்து பார்த்தால் அவை ஒரே நட்சத்திரம் போல தெரியும். அப்போது அவை மிகப்பிரகாசமாக தோன்றும்.

இதேபோன்ற ஒரு நிகழ்வு வருகிற 21-ந்தேதி வானத்தில் நடக்கப்போகிறது. வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11.9 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல சனி கிரகம் சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும் இரு கோள்களும் 21-ந்தேதி மாலை ஒரே நேர் கோட்டில் நமக்கு காட்சி அளிக்கின்றன.

அப்போது வெறும் கண்ணால் அவற்றை பார்க்கலாம். 2 கோள்களும் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்வதுபோல நமக்கு காட்சி தென்படும். இரண்டும் ஒன்றாக சேர்ந்து ஒரே நட்சத்திரம் போல நமக்கு தெரிவதால் அவை மிகப்பிரகாசமாக இருக்கும்.

நமது கண்ணுக்கு அவை ஒரே நட்சத்திரம் போல தெரிந்தாலும் இரு கிரகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 60 கோடி கிலோ மீட்டர் ஆகும்.

ஆனாலும் மிக தூரத்தில் இருந்து நாம் பார்ப்பதால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பது போல தென்படும்.

சனியும், வியாழன் கிரகமும் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. ஆனால் பூமியில் இருந்து வெவ்வேறு கோணத்தில் நேர்க்கோட்டுக்கு வருவதால் அதை நாம் காண்பது அரிது. கடைசியாக 2000-ல் அவை ஒன்றாக தோன்றினாலும் சூரியனுக்கு அருகே தென்பட்டதால் அவற்றை பார்க்க முடியவில்லை.

இதற்கு முன்பு 1623-ம் ஆண்டு இதேபோல இரு கிரகங்களும் நேர்க்கோட்டில் பிரகாசமாக காட்சி அளித்தது. அப்போது சனி கோளுக்கும், வியாழனுக்கும் இடையே 0.8 டிகிரி இடைவெளி இருந்தது.

தற்போது 0.1 டிகிரி கோணத்தில் வானத்தில் தோன்றப்போகிறது. 1623-ம் ஆண்டு அவை நெருங்கி இருந்தாலும் கூட பூமியில் இருந்து வேறு கோணத்தில் அவை இருந்ததால் அதை சரியாக பார்க்கமுடியவில்லை.

ஆனால் அதற்கு முன்னதாக 1226-ம் ஆண்டு இரு கோள்களும் இதேபோல நேர்க்கோட்டில் வந்தன. அப்போது பூமியில் இருந்து நன்றாக பார்க்கும் வகையில் அவை அமைந்திருந்தன.

இதனால் பிரகாசமான ஒளியை அவை உமிழ்ந்தது. இப்போது 800 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்ற ஒளியை பிரகாசமாக வெளிப்படுத்தும் நிகழ்வு 21-ந்தேதி நடக்கப்போகிறது.

சூரியனுக்கு கிழக்கே 30 டிகிரி கோணத்தில் அவை தென்படும். அன்றைய தினம் மாலை சூரியன் மறைந்து அரை மணிநேரத்தில் இந்த இரு கோள்களும் ஒன்றாக தெரிவதை காணலாம். அதாவது தமிழ்நாட்டை பொறுத்தவரை 6.30 மணிக்கு தென்படும்.

30 நிமிடத்தில் இருந்து 2 மணிநேரம் வரை நமது பார்வைக்கு நன்றாகத் தெரியும். அதன் பிறகு மறைந்துவிடும். அதே போல 20-ந்தேதி, 22-ந்தேதி ஆகிய நாட்களிலும் இந்த கோள்கள் ஒன்றாக ஒளிர்வதை பார்க்க முடியும். பின்னர் ஒன்றோடு ஒன்று விலகிச்சென்று விடும்.

இந்த காட்சி வானத்தில் தென்மேற்கே அரை கோளத்துக்கு கீழே அடிபகுதியில் தென்படும்.

அடுத்ததாக ஒவ்வொரு 20 ஆண்டுகளிலும் இதேபோல இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். 2040-ல் நவம்பரிலும், 2060-ல் ஏப்ரலிலும், 2080-ல் மார்ச் மாதத்திலும், 2100-ல் செப்டம்பர் மாதத்திலும் நேர்கோட்டில் வரும்.

ஆனாலும் வெவ்வேறு கோணத்தில் அவை நேர்கோட்டில் வருவதால் எல்லா ஆண்டுகளிலும் பூமியில் இருந்து சரியாக பார்க்க முடியாது.

2080-ம் ஆண்டு இரு கோள்களும் இப்போது வருவது போலவே அதிக ஒளியுடன் நேர்கோட்டில் வருகின்றன. அப்போதும் நாம் இதேபோல அவற்றை பிரகாசமாக கண்டு களிக்கலாம்.

இதன் பின்னர் 5521-ம் ஆண்டும், 7,541-ம் ஆண்டும் ஜூன் 17-ந்தேதி சனி கிரகத்தை வியாழன் முற்றிலும் மறைக்கும் அதிசய நிகழ்வு நடக்கப்போகிறது.

இப்போது இரு கோள்களும் ஒன்றாக இருப்பதை வெறும் கண்ணால் பார்த்தால் அப்போது நமக்கு சிறிதுகூட இடைவெளி தென்படாது. இரண்டுமே ஒரே நட்சத்திரம் தான் என்று நினைக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் தொலைநோக்கி கருவி மூலம் அவற்றை பார்த்தால் இரு கோள்களும் நூல் இழை அளவுக்கு இடைவெளி விட்டிருப்பதை பார்க்க முடியும். பூமியில் இருந்து வியாழன் அருகில் இருப்பதால் அது பிரகாசமாகவும், சனி தூரத்தில் இருப்பதால் சற்று மங்கலாகவும் இருக்கும்.

800 ஆண்டுகளுக்கு பின்னர் இரு கிரகங்களையும் நாம் பிரகாசமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில் இப்படி ஒரு நிகழ்வை பார்ப்பதற்கு காண கிடைத்தது மிகவும் பாக்கியமான ஒன்றாகும்.

இதே போல 5.4.2022-ல் சனியும், செவ்வாயும், 30.4.2022-ல் வெள்ளியும், வியாழனும், 29.5.2022-ல் செவ்வாயும், வியாழனும் ஒரே நேர்கோட்டில் வந்து பிரகாசமாக தோன்ற போகின்றன.

ஏசு கிறிஸ்து பிறந்த போது வானத்தில் பிரகாசமான நட்சத்திரம் தோன்றியதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. அது 2 கோள்கள் நேர்கோட்டில் தோன்றியதால் ஏற்பட்ட பிரகாசமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வருகிற 21-ந்தேதி மீண்டும் சனி மற்றும் வியாழன் கிரகங்கள் நேர்க்கோட்டில் சந்தித்து நட்சத்திரம் போன்ற பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளன.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இந்த கிரகங்களின் சேர்க்கை நட்சத்திர அடையாளத்தை உருவாக்குவதால் இதை “கிறிஸ்துமஸ் முத்தம்” என்று மேற்கத்திய நாட்டவர்கள் வர்ணிக்கின்றனர்.

பூமியில் கிடைக்கின்ற வைரங்கள் வானத்தில் உலவும் விண்கற்களில் இருந்து கொட்டியது என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. இது போன்ற கிரகங்கள் நேர் கோட்டில் வரும்போது ஈர்ப்பு விசை மாறி ஏராளமான விண்கற்கள் பூமியில் விழும். அப்போது வைர கற்களும் விழும் என்று நம்புகின்றனர்.

இப்போது சனியும், வியாழனும் ஒன்றிணைவதால் அப்போது விண்கற்களும், வைர கற்களும் பூமியில் விழலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இவை எதுவுமே சரியான தகவல் இல்லை என்று விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

வியாழன்-சனி கிரகங்கள் ஒன்றாக தோன்றுவதை நமது செல்போனில் படம் பிடிக்கலாம். சிறு புள்ளிகளாக தெரியும். 200 எம்.எம். முப்பரிமாண கேமராவாக இருந்தால் தெளிவாக தெரியும்.

சூரியனை 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. பூமியில் இருந்து பார்க்கும்போது நம்மால் செவ்வாய், வியாழன், சனி, வீனஸ், மெர்குரி ஆகிய கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *